அருணன் ஒரு நல்ல துடிப்பான இளைஞன். மாணாக்கனாக, புத்தக வெளியீட்டாளனாக, கணினிக் கலைஞனாக, கோபக்கார அடுத்த தலைமுறைக்காரனாக வளர்ந்து வரும் ஆசிரியராகத் தெரியும்- எனக்கு ஒரு முழு ஐந்து ஆண்டுகளாக. அதற்கு முன்பே அவனுக்குத் தெரிந்தவர்கள் எனக்கும் தெரிந்தவர்களாக இருந்ததால் ஒரு தொந்த சொந்த பந்தம் உண்டாகி விட்டது.
நான் வாசித்த ஜெயகாந்தன் படைப்புகள் அருணனுக்கு மனப்பாடம். நான் மதித்துப் படிக்கும் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் அணுக்கத்திலேயே இந்தப் பிள்ளை வளர்ந்திருக்கிறான். நான் பாரதியார் பாடலை முணுமுணுத்தால் இவன் அடுத்து வரும் வரிகளைச் சத்தமாக ஓதிச் செல்வான்.
அருணன் கவிதை எழுதிக் காட்டினான்; நமது பள்ளி நிகழ்வுகளில் திருக்குறள் சிறப்புரையாற்றினான்; எனது ஆய்வுக்கட்டுரைகளுக்கு நகலெடுத்துக் கொடுத்து உதவினான். சந்தடி சாக்கில் ஓரிரு தாள்களை இடையில் வைத்துப் படித்துப் பாருங்கள் என்றான். படித்துப் பார்த்தேன். கதைகள்.. ‘ம்... மேலும் எழுதிப் பாரேன். வாசிக்கலாம்’ என்று சொல்லி வாக்கியத் தொடரை முடிக்கும் முன்னரேயே ‘இதைப் பிடியுங்கள், படியுங்கள்’ என்று ஒரு கத்தைத் தாள்களை மேசைமீது அடுக்கி வைத்தான்.
அதிகமாகக் கட்டுரை, கவிதை வாசிக்கும் எனக்குக் கதைகளில் மனம் வைக்க நேரமாகும். ஒருவாரம் அருணனின் கதைத்தொகுதி முதல்பிரதி ஆரோவில் வீட்டு மேசையில் இருந்து என்னுடன் சிங்கப்பூர் செல்லும் பெட்டிக்குள் வாசம் செய்து திரும்பும்வழியில் சென்னை ஐப்பசி அடைமழையை அனுபவித்தபடி மீண்டும் நர்சரித் தோட்டத்திற்குள் நுழைந்தது. வாசித்தேன். முதல்முறை சாதாரணமாக வாசித்தேன். இரண்டாவது முறை இத்தொகுப்பிலுள்ள கதைகளைத் தனித்தனியே மூன்று வேளை உணவுபோல உட்கொண்டு இருந்தேன்.
அருணனின் கோவலன், இராமன், மணிமேகலை எல்லாம் நிழல்களாகவே வந்து போகிறார்கள். பாபுவும் பட்டினத்தாரும் மகாத்மா காந்தியும்அப்படியே. நாம் அவர்களாக இருந்தால் எப்படியெல்லாம் பேசியிருப்போமோ அப்படிப் பேசிப் பழக ஒரு நாடக மேடை போட்டு மனம் நடித்துப் போகிறது. ஒரு தேர்ந்த உளவியல் பேராசிரியர் இக்கதாபாத்திரங்களை நாடக பாணியில் ஆய்வுசெய்வது போல அகவய மதிப்பீடாக அமைந்துள்ளது. புதிய யுக்தி, புதிய கோணம் என்றாலும் ஒரே மாதிரியான வார்த்தை அடுக்கல்களால் படித்ததையே படிக்கிறோமோ என்றதொரு சிற்றலுப்பு சில இடங்களில் ஏற்படுகிறதுதான். சிறுகதை வாசிப்பைப் பொழுதுபோக்கு நேரக்கணக்கில் பங்கு வைக்கிறவர்களுக்கு அப்படித்தான் தோன்றும்.
எப்படியானாலும் இவை ஆழமானவை. வெளியேறும் பேச்சுகளை அடித்துச் செல்லும் வெள்ளமாக்கி விடாமல் சிறுகச்சிறுக அணைகட்டி மதகுகள் வழியே பயனுற வெளியேற்றும் தேர்ந்த உத்தியாகவும் எனக்குத் தோன்றுகிறது.
இத்தொகுப்பினுள் என் நெஞ்சம் தொட்டவை நடிப்பும், மொந்தன் வாழையும். நம் ஊரில் நம்முடன் வாழும் சக மனிதர்களின் அன்றாடப் பங்களிப்புகளில் சிறிது கிள்ளி எடுத்துப் பதியம் போட்டமாதிரியே உள்ளவை அவ்விரண்டு கதைகளும். நம்முடன் நெருங்கி வருகின்றனர் மொந்தன் வாழைக் குழந்தைகளும், பரிச்சயமான கதை மாந்தர்களும். அருணனின் சமூக விழிப்பு இக்கதைக்கு உயிரூட்டுகிறது. சராசரி நடுத்தர வர்க்கத்து மனிதர்களின் சினிமாக்கலை ஆசை பதிவாகியுள்ளது. சினிமாவினால் யார் யார் எதை எதை இழக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளாமலேயே அந்தப் பொய் முகத்தில் பதிந்து போவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தவிக்கும் நண்பனின் தவிப்பு மெய்யானது. அதை, அருணன் நாடகவெளி கொடுத்துக் காட்சிப்படுத்தியிருப்பது சிறுகதை சொல்லலில் ஒரு நல்ல நிறைவான அனுபவத்தைப் பெற்றுத் தந்துள்ளது.
அருணனிடம் திருப்பிச் சொல்வதற்கு கேட்டு ரசித்த விஷயங்களும் பார்த்து உள்வாங்கிக் கொண்ட அனுபவப் படிவங்களும் குவிந்து கிடக்கின்றன. படித்துக் கொண்டிருக்கும் தமிழ் இலக்கியச் செறிவும் இணைந்து உயர்வான படைப்புகளை அச்சிலேற்ற வாய்ப்புகள் இருக்கின்றன. படைப்பிலக்கியத் துறையில் ஞானபீடம் ஜெயகாந்தனையும் கவிஞர் சிற்பியையும் ஆதர்சமாகக் கொண்டுள்ள இளவல் அருணன் மேலும் எழுதிக் குவித்தல் என்பது சாத்தியமே.
நல்ல தரமான வாசகனாகவும், புதுச்சேரி கபிலன் பதிப்பகத்துப் பொறுப்பாளனாகவும் அறிந்துள்ள அருணனை, கதாசிரியனாகவும் அறிமுகம் செய்து வைப்பதில் பெருமைப்படுகிறேன்.
மேலும் சிறப்பாக எழுத இளைஞர்கள் கல்வி மையம், தமிழ் மரபு மையம் சார்பில் ஆரோவில் சகோதர வட்டத்தினர் வாழ்த்துகளைப் பூக்கூடையில் அடுக்கி அனுப்புகிறார்கள்.
வாழ்க வளர்க!
அன்புடன்
இரா. மீனாட்சி
மாத்ரி மந்திர் நர்சரி,
ஆரோவில் - 605101
Read more: http://kapilanpathippagam.webnode.com/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81/
Create your own website for free: http://www.webnode.com